Pages

Friday, 4 March 2016

விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பன் ''சௌசௌ


ஏலக்காய், மிளகு, வாழை, கொய்மலர் என்று இடத்துக்கு ஏற்ப மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான மலைத்தோட்ட விவசாயிகளுக்கு தக்க சமயத்தில் உதவும் நண்பனாக இருப்பது 'சௌசௌ' காய்தான்.

ஒரு ஏக்கர் நிலமும், தண்ணீர் வசதியும் இருந்தால் நடவு செய்த நான்காவது மாதத்திலிருந்து வாரம்தோறும் வருமானம் பார்க்கலாம்.  நோய் தாக்குதல் அதிகம் இருக்காது என்பதோடு, மலைத்தோட்டப் பயிர்களில் அதிக பராமரிப்பு தேவைப்படாத ஒன்றாக இருப்பதாலும் முக்கியப் பயிராக விளங்குகிறது சௌசௌ.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள மலைப்பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிகுடி, ஆடலூர், பகுதிகளில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.


சௌசௌ காயைப் பொறுத்தவரை ஒவ்வொரு மலைப்பகுதியிலும் ஒவ்வொரு பருவத்தில் நடுவார்கள்.  சமவெளி பகுதியைப் போல இங்கே உழவு செய்யமுடியாது.  நிலத்தில் இருக்கும் புதர்களை நீக்கிவிட்டு, 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டடி ஆழ, அகலத்தில் குழி எடுத்து, பத்து நாளைக்கு ஆறப்போட வேண்டும்.  ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 200 குழிகள் வரும்.  குழி எடுப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகவே விதைக்கான காய்களை கொடியிலிருந்து காய்களை எடுத்து பதியம் போட்டு வைக்க வேண்டும்.  முற்றிய காய்களை பறித்து, மேடான இடத்தில் பாத்தி அமைத்து, மண்ணைப்போட்டு மூடிவிட்டால் இதுதான் பதியம்.  நான்காவது நாள் முறை விட்டுவிடும்.  பத்து நாட்களுக்குள் வசதிக்கு ஏற்றாற்போல அவற்றை எடுத்து நடவு செய்யலாம்.

காயை உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டுவிட்டால் சில தினங்களில் தானாக முளைப்புத் தோன்றும்.  அவற்றை அப்படியே எடுத்தும் நடவு செய்யலாம்.  குழிக்கு நான்கு காய்கள் வீதம் நடவேண்டியிருக்கும்.  ஆனால், பதியம் போடும்போது, மூன்று காய்களை நடவு செய்தாலே போதும்.  அத்துடன் முளைப்புத் திறனும் அதிகமாக இருக்கும்.

தோண்டி வைத்த குழி நன்கு ஆறிய பின், ஐந்து கிலோ வீதம் எருவைப் போட்டு, பிறகு விதைக்காயை போட்டு மூடி தண்ணீர் விடவேண்டும்.  மூன்று நாட்களுகொரு தடவை தண்ணீர் அவசியம்.  நடவு செய்த ஐந்தாவது நாளில் முளைவிடும்.  பத்து நாளில் கொடி தரையில் படர ஆரம்பிக்கும்.  குச்சிகளை ஊன்றி கொடியை அதில் ஏற்றி விடவேண்டும்.  அதன் பிறகு பந்தலை போட்டு வைத்தால், கிட்டத்தட்ட எழுபத்தைந்தாவது நாளில் பந்தலைத் தொட்டுவிடும் ( ஒரு தடவை பந்தல் போட்டால், ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து சாகுபடி செய்யலாம்.)

கொடி தழைய தொடங்கியதும் அதன் அடிப்பாகத்தை சுற்றி நான்கு அடிக்கு சதுர பாத்தி எடுக்க வேண்டும்.  பந்தல் முழுக்க கொடி படரும் காலம் வரை இரண்டு களை எடுக்க வேண்டும்.  நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு மாதம் ஒரு தடவை வீதம் மூன்று மாதங்களுக்கு 200 கிராம் வீதம் யூரியாவை குழிகளில் வைக்க வேண்டும். 4 வது மாதத்தில் அரை கிலோ கலப்பு உரம் வைக்க வேண்டும், அதைத் தொடர்ந்து 21 நாளைக்கு ஒரு தடவை 200 கிராம் யூரியா கொடுக்க வேண்டும்.

நடவு செய்த 100 வது நாளில் பூக்கத் தொடங்கி 120 வது நாளில் காய் அறுவடைக்கு வந்துவிடும்.  அன்று தொடங்கி எட்டு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை காய் பறிக்கலாம்.  மொத்தம் ஒரு வருட சாகுபடி.  பறிப்புத்தொடங்கிய முதல் நாலு மாதங்களை விட அடுத்த நான்கு மாதங்களில் விளைச்சல் கொஞ்சம் குறையும்.

ஒரு பறிப்புக்கு ஒரு ஏக்கரிலிருந்து சராசரியாக 40 சிப்பம் வரைக்கும் எடுக்கலாம்.  சிப்பம் குறைந்தபட்சம் 80 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 350 ரூபாய் வரை போகும்.  சராசரி விலை ரூ.175 கிலோ கணக்கில் சொன்னால் 4 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகும்.  மொத்த மகசூல் 27 டன்.  செலவெல்லாம் போக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வரை ஒரு ஏக்கரிலிருந்து லாபம் பார்க்க முடியும்.

No comments:

Post a Comment